தமிழில் விஞ்ஞானத்தை வளர்ப்போம்

2021-06-04

குயில் கூவுகிறது. சிங்கம் கர்ஜிக்கிறது. தேனீக்கள் ரீங்காரக்கின்றன. மனிதன் பேசுகிறான். இவை அனைத்திற்கும் பொதுவானது என்னவென்றால் இவை ஒலியின் வெவ்வேறு வடிவங்கள். மனிதன் மற்றும் சக ஜீவன்கள் தகவல் பரிமாறுவதற்கு ஒலி மூல காரணமாக இருக்கிறது. அது சரி, மற்ற அனைத்து விலங்குகளுக்கும் மனிதனுக்கும் தகவல் பரிமாற்றுதலில் என்ன வேற்றுமை என்று பார்த்தால், மனிதன் மட்டுமே ஒலிக்கு ஒரு வடிவம் கொடுத்து அதை எழுத்தாகவும் பகிற்கிறான்.

ஆம், ஒலியின் வடிவமே எழுத்து. நாம் பேசும் சொற்களுக்கு நாம் கொடுத்துள்ள வடிவம் (வரைபடம் என்று கூட சொல்லலாம்) தான் எழுத்து. நாம் படிக்கும் பாடப்புத்தகங்களில் இருக்கும் எழுத்து, பல காலங்களுக்கு முன்னாள் ஒரு ஒலியின் வரை படமாக தோன்றி, காலப்போக்கில் திருத்தம் அடைந்து, இப்பொழுது இருக்கும் வடிவில் அச்சிடு செய்து நம் புத்தகங்களில் பார்க்கிறோம்.

இங்கு நாம் கேட்க வேண்டிய கேள்வி என்ன வென்றால் மனிதன் ஏன் ஒலிக்கு வடிவம் கொடுத்தான்? பாலில் ஒரு துளி தயிர் விட்டு தயிர் ஆக்கி, அந்த தயிரை கடையும் போது தான் தூய்மையான வெண்ணை உண்டாகிறது. அதே போல் தான் அறிவும். நாம் நிறைய படித்து, பல கருத்துகள் அறிந்து, நமது மனதை ஆராயும் பொழுது, நமது மனம் தெளிவு அடைந்து அறிவு உண்டாகிறது. ஒலிக்கு வடிவம் தருவதால், எண்ணங்களை பரவலாக பரிமாற முடிகிறது. எடுத்துக்காட்டாக, நாம் செய்தித்தாள் படிக்கும் பொழுது, எங்கோ இருக்கும் ஒருவரின் கருத்துக்களை அறிய முடிகிறது. இவ்வாறு நாம் பல கருத்துக்கள் அறியும் பொழுது, அந்த கருத்துக்களால் உண்டாகும் எண்ணங்களை மனதில் ஆராய்ந்து அறிவை வளர்த்து வாழ்வில் மேம்பட முடிகிறது.

அறிவியல் வளர்வதற்கு பெரிதும் உதவுவது பல மனிதர்களின் சிந்தனைகள் மற்றும் அச்சிந்தனைகளின் பரிமாற்றல். சிந்தனை என்பது அனைவரிடமும் உள்ளது ஆனால் அந்த சிந்தனையை பிறர்க்கு வெளிப்படுத்த, அவன் சிந்தனையை எழுத்து மற்றும் பேச்சின் மூலம் உலகிற்கு அறியவைத்தல் வேண்டும்.

நான் சிறு வயது முதல் கல்லூரி வரை படித்த அறிவியல் புத்தகங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருந்தன. ஆனால் என் எண்ணங்கள் தமிழில் இருக்கும். இந்த எண்ணத்தின் ஓட்டத்திற்கும் தகவல் அறிவது மற்றும் பரிமாறுவது வெவ்வேறு மொழிகளில் இருப்பதால், நான் தமிழில் நினைத்ததை ஆங்கிலத்தில் பகிர மொழியால் ஒரு சிறிய தடை உண்டாகியது. அனைவராலும் இந்த தடையை எளிதில் வென்று விட முடியவில்லை. இத்தடையினால் அறிவியலின் வளர்ச்சிக்கு பலராலும் எளிதில் பங்கு அளிக்கவும் இயலவில்லை. இதனால் அறிவியலின் வளர்ச்சி சற்று தேய்கிறது என்று கூட கூறலாம். நான் பிற மொழி கற்க வேண்டாம் என்று கூறவில்லை, ஏதேனும் ஒரு மொழியிலாவது நன்கு பயின்று இருக்க வேண்டும் என்று கூறுகிறேன். அதுவே நம் எண்ணங்களை எளிதில் பகிர்வதற்கு துணைபுரியும்.

இந்த தடையை உடைப்பது மூலம் பலரும் அறிவியலின் வளர்ச்சிக்கு பங்கு அளிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். தமிழில் அறிவியல் புத்தகங்கள் அதிகமாக எழுதி படித்தால் அறிவியல் கருத்துகள் ஒருவனுக்கு எளிதாக புரியும். கற்றலும் பகிர்வதும் ஒரே மொழியில் இருப்பதால், அறிவியல் வளர்ச்சி மிகவும் வேகம் அடையும் ஏனெனில் அந்த எளிய மனிதன் கூட வளர்ச்சிக்கு மொழியின் தடை இல்லாமல் பங்கு அழிக்கலாம். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு சீனா. சீனர்களின் பாடப் புத்தகங்கள் முதல் கணினி வரை பயன்படுத்தும் மொழி சீன மொழி.

இதில் மற்றொரு நன்மையையும் உண்டு. சிறந்த சிந்தனையாளர்களுக்கு ஒரு தனித்துவமான சிறப்பு என்னவென்றால் ஒரு கேள்விக்கு பதிலை பல கோணங்களில் இருந்து யோசிப்பது. நமது எண்ணங்கள் தடை இன்றி ஆறு போல் ஓடினாள் மட்டுமே இதை செய்ய முடியும். ஒரு மொழியில் நன்கு அறிந்து இருப்பது இதற்கு பெரும் உதவி செய்யும்.

        எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
        கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

என்கிறார் வள்ளுவர்.

தமிழில் அறிவியல் நூல்களை எழுதி, தமிழில் பயின்று, சிந்தனையை ஆராய்ந்து, அறிவை பகிர்ந்து அறிவியல் வளர்ச்சிக்கு அனைவரும் பங்கு அழித்து மனித குலத்தை மேம்பட செய்வோம்.

பின் குறிப்பு: இந்த வலைப்பதிர்வுக்கு உத்வேகமாக இருந்தது அன்புக்குரிய திரு. பரத் இராமசுந்தரின் தமிழில் விஞ்ஞானத்தை வளர்ப்போம் கட்டுரை. அத்தலைப்பையே இந்த கட்டுரைக்கும் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்ததற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பதிவை சரிபார்த்தற்க்காக திரு. குரு சுப்ரமணியன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.